search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்வர் பினராயி விஜயன்"

    கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி ஷானவாஸ் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #WayanadMP #ShanavasMP #KeralaCongress
    சென்னை:

    கேரளா காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும் வயநாடு மக்களவை தொகுதி எம்.பி.யுமான எம்.ஐ ஷானவாஸ் (வயது 67) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2-ம் தேதி அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின்னர் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஷானவாஸ் உயிரிழந்தார். அவரது உடல் இன்று பிற்பகல்  கொச்சிக்கு எடுத்துச் செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    எம்பி ஷானவாஸ் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி, எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    வயநாடு மக்களவைத் தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஷானவாஸ். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். #WayanadMP #ShanavasMP #KeralaCongress
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக இதுவரை ரூ.738 கோடி நிதி வந்திருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். #KeralaAssembly #KeralaFloods #KeralaCM #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    கேரளாவை புரட்டிப் போட்ட பேய் மழையால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

    மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை முப்படை வீரர்களும், போலீசார், தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் மீட்டு நிவாரண முகாம்களில் சேர்த்தனர்.

    தற்போது மழை ஓய்ந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். மழையால் சேதமான கேரளத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.

    நிவாரண பணிகளில் அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அரசு கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் கேரள மந்திரி சபை கூட்டம் நடந்தது.

    இதில் கேரள வெள்ளப் பாதிப்பு குறித்த அறிக்கை தாக்கல் செய்யவும், இனி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கவும் கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று நடந்தது. கூட்டம் தொடங்கியதும் முதல்-மந்திரி பினராயி விஜயன் கேரளாவில் மழையால் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். தொடர்ந்து மழை வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

    பின்னர் அவர் கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ள சேத நிலவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-


    கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேரழிவு இப்போது ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் கொட்டித்தீர்த்த மழையும், அதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கிலும் சிக்கி 483 பேர் பலியாகி உள்ளனர். 14 பேர் மாயமாகி உள்ளனர். இவர்களை பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    14 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    மழையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி இருந்தவர்களுக்கு உடனடி உதவிக்காக மத்திய அரசு நிதியில் இருந்து ரூ.3800-ம், மாநில அரசு கூடுதலாக ரூ.6200-ம் என ரூ.10 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது.

    வெள்ள நிவாரண பணிகளில் 40 ஆயிரம் போலீசார் ஈடுபட்டனர். இவர்களுடன் 3200 தீயணைப்பு வீரர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டனர்.

    எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி மீட்பு பணிகளில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டுகிறேன். அவர்களுக்கு இந்த அரசு வீரவணக்கம் செலுத்துகிறது.

    கேரளம் இந்த பாதிப்பில் இருந்து மீண்டு எழும். அதற்கான நடவடிக்கைகளை அனைவரும் ஒன்று சேர்ந்து எடுப்போம்.

    கேரளாவில் 5700 ஹெக்டேர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. இன்னும் 59,200 பேர் நிவாரண முகாம்களில் தான் இருக்கிறார்கள்.

    மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டெழ கேரளாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் வருகிறது. முதல்-மந்திரியின் வெள்ள நிவாரண நிதிக்கு ஏராளமானோர் நிதி உதவி செய்து வருகிறார்கள். கடந்த 28-ந் தேதி வரை நிவாரண நிதியாக ரூ.738 கோடி சேர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று பிற்பகல் 2 மணி வரை நடக்கிறது. கூட்டத்தில் வெள்ள நிவாரணம், மறுகட்டமைப்பு, சீரமைப்பு பணிகள், நிவாரண உதவி வழங்குவது குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபடும் என்று தெரிகிறது. #KeralaAssembly #KeralaFloods #KeralaCM #PinarayiVijayan

    கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், முதல்வர் பினராயி விஜயன் எதிர்க்கட்சி தலைவருடன் சென்று ஆய்வு செய்தார். #KeralaRains #KeralaFloods2018 #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் கட்டிடங்கள் இடிந்துள்ளன.

    இடுக்கி, மலப்புரம், கண்ணூர்,  வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக 29 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், கப்பற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பினராயி விஜயன் இன்று பார்வையிட்டார். ஹெலிகாப்டர் மூலம் அவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வெள்ள சேதங்களை ஆய்வு செய்தார். இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய பகுதிகளில் இன்று வெள்ள சேதங்களை பார்வையிடுகிறார். அவருடன் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோரும்உடன் சென்று வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கின்றனர்.

    உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை கேரளா வந்து, மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட உள்ளார். பின்னர், முதல்வர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மீட்பு பணிகள் குறித்து கேட்டறிவார் என தகவல் வெளியாகி உள்ளது. #KeralaRains #KeralaFloods2018 #PinarayiVijayan




    கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பாரதிய ஜனதா தொண்டர்கள் கொலையால் ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலை குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம், கவர்னர் அறிக்கை கேட்டுள்ளார். #Sathasivam
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடந்து வருகிறது.

    கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி அமைந்த பிறகு அந்த கட்சி தொண்டர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சியினருக்கும் அரசியல் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக 2 கட்சியை சேர்ந்தவர்களும் படுகொலை செய்யப்படும் செயல்களும் அரங்கேறி உள்ளது.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் சொந்த ஊரான பினராய் மற்றும் கண்ணூரிலும் அதிகளவு அரசியல் கொலைகள் நடந்துள்ளது.

    இந்த நிலையில் கண்ணூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர் பாபு மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர் சமேஜ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.


    இதனால் கண்ணூரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இந்த கொலைகள் காரணமாக பதட்டமான சூழ்நிலையும் நிலவி வருகிறது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர் பாபு கொலையை தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதாக அந்த கட்சியைச் சேர்ந்த 500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல பாபு கொலை தொடர்பாக 4 பேர் மீதும் பாரதிய ஜனதா தொண்டர் சமேஜ் கொலை தொடர்பாக 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா நேரடியாகவும் விசாரணை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே அரசியல் கட்சி தொண்டர்கள் 2 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டது, அதனால் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலை குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் கேரள கவர்னர் சதாசிவம் அறிக்கை கேட்டுள்ளார்.

    ஏற்கனவே 6 மாதத்திற்கு முன்பு இதேபோல அரசியல் கொலைகள் தொடர்ந்து நடைபெற்றபோது கேரள அரசிடம் கவர்னர் அறிக்கை கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #KeralaCM #PinarayiVijayan #Governor #Sathasivam
    ×